ஜாதகம் என்பது அவரவர் முற்பிறவியில் செய்த நல்வினை தீவினைகளின் தன்மைகளை கூறுவது. தீவினை செய்தோர் தீமையையும், நல்வினை செய்தோர் நன்மையும் அடைதல் என்பது பிரம்ம தேவர் விதித்த விதி என்று கூறப்படுகிறது. அதனடிப்படையில் கோள்களின் நிலை உணர்ந்து ஜோதிட சாஸ்திரங்களை நம் முன்னோர்கள் கணிதத்தில் அறிந்து நல்ல காலம் வரும்போது மகிழ்ச்சி அடையலாம், அதேசமயம் தீயகாலத்தின்போது வருந்தாமல் அதனை தெய்வத்தின் திருவருளால் கடந்து செல்லலாம் என்று அருளிச் செய்தனர்.
எனவே காலத்தின் மீதும் சாஸ்திரங்களின் மீதும் நம்பிக்கை உடைய நன்மக்களுக்கு வரும் நன்மை தீமைகளை அறிய, நம் முன்னோர்கள் வானியல் கணிதத்தில் எவ்வாறெல்லாம் ஆராய்ந்து பலன்கள் அளித்துள்ளனர் என்று கூறுவதே இந்த ஜோதிட கட்டுரையின் நோக்கம்.
ஜாதகம் என்றல் என்ன?
ஜாதகம் என்பது ஜாதகர் பிறந்த நேரத்திற்கு ஏற்ற கோள்நிலைகளால் உண்டாகும் பலன்களை கண்டறிந்து கூற உதவுகிறது.
- திதி
- வாரம்
- நட்சத்திரம்
- யோகம்
- கரணம்
இந்த பஞ்ச அங்கங்களின் அடிப்படையில், இலக்கினம், ஒன்பது கோள்கள், போன்றவற்றால் பிணைக்கப்பட்டது என்று வேத புராணத்தில் சூத சம்ஹிதை கூறுகிறது.
வருணாசிரம தருமங்களைக் கைவிடாமல் கடைப்பிடித்து வந்தால் முக்தி இன்பம் கிட்டும் என்று சூதர் கூறுகிறார். எனவே கர்ப்பதானம், சீமந்தம், நாமகரணம், பிரவாசம், விவாகம் முதலிய 16 வகையான கருமங்களை ஒருவன் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இவற்றை சுபமாக ஒருவர் செய்வதற்கு நல்ல காலம் உகந்த நேரங்களை அறிந்து செய்வதற்கு இவற்றுள் ஜாதக கர்மமே (குழந்தை பிறந்தபோது எழுதும் ஜாதகம்) முதன்மை பேறாக உதவுகிறது. மேலும் பஞ்சாங்கம், ஜோதிடம் பார்த்து செய்யப்படும் செயல்கள் யாவும் நன்மையிலேயே நிறைவு பெரும்.
எனவேதான் ஜாதகத்தின் சிறப்பு பற்றி எளிதில் புரியும்படியாக முதன்மையாக இதனை சூதர் கூறுகிறார். மேலுமிது இப்பதினாறு ஸோடஷ கர்மாக்களை கைவிட்டோர் பல பிறவிகளில் கொடிய நரகத்தினை அடைந்து இடர்படுவர் என்று சூதசம்ஹிதை கூறுகிறது.
ஒவ்வொரு ஜாதகத்தில் முதன்மையாக பின்வரும் மங்கள சுலோகத்தை ஜோதிடர் எழுதுவார்
ஜநநீ ஜந்ம செளக்யாநாம் வத்தநீ குலசம்பதாம்
பதவி பூர்வ புண்யாநாம் லிக்யதே ஜந்மபத்திரிகா
பிறப்பில் மகிழ்ச்சியை உண்டாக்குவதும் குலச்செல்வத்தை விருத்தி செய்வதும் முன்நல்வினையின் வழியுமாகிய ஜனன பத்திரிகை எழுதப்படுகிறது. எனவே அந்த ஜாதகமானது முற்பிறப்புகளினால் சம்பாதிக்கப்பட்ட நன்மை தீமைகளை தெரிவிக்கும் பொருட்டே எழுதப்படுகிறது.
ஒரு ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொள்ளும் வலிமையால் ஒரு சுப காரியங்களை செய்யும் பலனானது மேன்மேலும் விருத்தியடையும். அதனால் நலமும் வளமும் பெறுவதுடன் இறைவனை ஆராதிக்கும் வழியில் பீடைகள் கழிந்தவர்களாகவும் ஆவார்கள்.
இனி ஜோதிடம் கூறும் ஆய்வுகளை பலன்களோடு இணைந்து ஒவ்வொறு பதிவிலும் காண்போம். இந்த பதிவுகள் அனைத்தும் சாஸ்திரத்திற்கு உட்பட்டது.
மேலும் சாஸ்திரத்திற்கு விரோதமான பதிவுகள் இதில் இடம் பெறாது.