ஆண் – பெண் ஜனன ஜாதகம் ஒரே அமைப்பு சக்கரமாக இருந்தாலும்கூட, ஒரு பெண்ணின் ஜாதகம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
தமிழ் பண்பாடும் வேத நாகரிகமும் பெண்களை மையமாக வைத்து உருவானதேயாகும். பிறந்த வீட்டில் ஒரு பெண் ஒளிவிளக்காக, புகுந்த வீட்டில் அந்த பெண் குல விளக்காக, அந்த குடும்பத்தின் வம்ச வாரிசுகளை அபிவிருத்தி செய்யும் குலமகளாக திகழ்கிறாள்.
ஒரு பெண்ணுக்கு மிக சிறந்த சாத்வீக குணமும், பொறுமையும், மென்மையான மிருதுவான தன்மையும், ஸ்ரீமகாலட்சுமியின் கடாட்சம் கொண்டவளாகவும் இருக்க வேண்டும் என்று பெரியோர் கூறுவர்.
ஒரு பெண் உடலளவில் பல அலங்காரங்கள் செய்து உயர்ந்தவளாக தன்னை வெளிப்படுத்தினால் மட்டும்
அது அழகல்ல. அன்பிலும், பண்பிலும், கற்பு நெறி ஒழுக்கத்திலும், உள்ளத்து உணர்விலும், தன்னை உயர்ந்தவளாக வெளிப்படுத்துவதே தேவதையைப் போன்ற பெண்ணாவாள் என்பது பெரியோர் வாக்கு.
தன்னைப் பெற்றவர்கள் பெருமை அடையும்படி சிறந்த மகளாக, கட்டிய கணவனுக்கு கற்பு நெறி, ஒழுக்கம் தவறாத அன்பான மனைவியாக, தான் பெற்ற குழந்தைகளுக்கு பாசமும் பரிவும் கொண்ட தாயாக, சமூகத்தில் அவளைக் கண்டதும் கையெடுத்து வணங்கக்கூடிய ஒரு திருமகளாக, ஒரு பெண் திகழ வேண்டும்.
பெண் ஜாதகத்தை ஏன் பார்க்க வேண்டும்
அந்தப் பெண்ணின் ஜாதகம் எவ்வளவு சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது என்பதை நாம் உணர்தல் அவசியமாகிறது. திருமண பொருத்தம் கணிக்கும் போது ஒரு சிறந்த ஜோதிடர் ஆண் ஜாதகத்தையும் விட மேலானதாக பெண் ஜாதகத்தையே மிகவும் கவனமாக கையாளவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
ஏனெனில் ஒரு குடும்பத்தின் அடித்தளமான ஆணிவேரே பெண்தான். ஒரு ஆண் எத்தனை கோடி சொத்துக்களை வடக்கே தெற்கே என அலைந்து சம்பாதித்தாலும், உண்மையில் அவன் உடலளவிலும், உள்ளத்தளவிலும் மனநிறைவும், சுகமான சுகங்களில் மகிழ்வும், தன்னுடைய புத்திர சந்தானங்களில் பெருமிதம் அடைவதும் என்பது, ஒரு பெண்ணால் தான் என்றால் அது மிகையாகாது.
அப்படிப்பட்ட ஆணின் ஜாதகம் சற்று ஏறக்குறைய அமைப்பில் அமைந்தாலும் பெண்ணின் ஜாதகம் சிறப்பாக
அமையும்போது அந்த குடும்பம் சிறப்பாக நடைபெற வாய்ப்புள்ளது.
அதேசமயம் ஆணின் ஜாதகம் சிறப்பாக அமைந்து பெண்ணின் ஜாதகம் சிறப்பாக அமையவில்லை எனில்
பலவிதமான வகைகளில் பிரச்சனைகள் உருவாகி ஒரு குடும்பம் சந்தி சிரிப்பையும் அல்லது துக்கங்கள் கவலைகள் ஏற்படுவதையும் பின்னர் அந்த குடும்பம் இரண்டாக உடைந்து விடுவதையும் கண்கூடாக காண்கிறோம்.
ஒரு மனிதன் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே. ஆகவே திருமணம் – குடும்பம் சிறப்பாக அமைவதற்கு பெண்ணின் ஜாதகமே மகத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
ஆணின் விதியை நிர்ணயிப்பது பெண்ணின் ஜாதகம்
ஆண்களின் விதியை நிர்ணயிப்பதே பெண்களின் ஜாதகம் தான். ஒரு பெண் மங்களகரமானவளா, அபாயகரமானவளா, என்பதை மேற்கொண்டு ஜோதிடத்தில் மூல சாஸ்திர நூல்களில் முன்னோர் கூறியுள்ளார்கள்.
உதாரணமாக ஒரு ராசி சக்கரத்தில் அந்த பெண்ணினுடைய ஜென்ம லக்னமும், ஜென்ம ராசியும், பெண் ராசிகளில், அதிலும் பெண் ஹோராவிலேயே, அதேபோல் நவாம்சத்திலும் அமைந்து. மேலும் அந்த லக்ன மற்றும் ராசி அதிபதிகளும், ராசி மற்றும் நவாம்சத்தில் பெண் ராசிகளிலேயே அமர்ந்து இருந்தால் அவள் உண்மையான பெண்ணுக்குள்ள அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலிய அம்சங்களை முழுமையாக பெற்றவராக அடைகிறாள் என்பதாகும்.
திருமண பொருத்தம் பார்த்து தான் விவாகம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? தொடர்ந்து காண்போம்