காலம் எனும் தத்துவம், ஆதி-அந்தம் இல்லாது தொடர்ந்து நடைபெறுவதாகும். காலம் எனும் பொருள், நாள் முதல் கல்பங்கள் வரையிலானது.
ஒருவரின் வாழ்நாளை வரையறுப்பவர் நம் அனைவரையும் படைத்த நான்முகன் பிரம்மனே.
இப்பதிவில் கால பரிமாணம் என கூறப்படும் கால-அளவு விளக்கங்கள் பற்றி காண்போம்.
கால பரிமாணத்தில் பிரம்மனின் பகல்-இரவு, நான்கு யுகங்கள் மற்றும் யுகச் சந்திகள் பற்றிய விளக்கங்கள் உள்ளன. இத்துடன் மனிதர்கள், தேவர்கள் மற்றும் பிரம்மனின் கால அளவுகளின் விவரங்களும் அடங்கும்.
கால அளவுகள் மூன்று வகைகளாக பிரிக்கப்படும்.
1. மனுஷ்ய மானம்
மனிதர்களின் கால அளவுகள் கண் இமைக்கும் நேரத்திலிருந்து தொடங்குகிறது. இதுவே மனித நேரத்தின் மிக சிறிய அளவு. இதன் பிறகு வருவது, நிமிடம். தொடர்ந்து பெருகும் அளவுகளை பார்ப்போம்.
- பதினைந்து நிமிடங்கள் ஒரு காஷ்ட்டை ஆகும்.
- முப்பது காஷ்ட்டைகள் ஒரு கலை ஆகும்.
- முப்பது கலைகள் ஒரு முகூர்த்தம் ஆகும்.
- முப்பது முகூர்த்தங்கள் ஒரு இரவு-பகல் கணக்காகும்.
- இரவும் பகலும் சேர்ந்து ஒரு நாள் ஆகும்.
- பதினைந்து நாட்கள் ஒரு பக்ஷம் ஆகும்.
- இரண்டு பக்ஷங்கள் ஒரு மாதம் ஆகும்.
- ஆறு மாதங்கள் ஒரு அயனம் ஆகும். முதல் ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும் மீதம் ஆறு மாதங்கள் தக்ஷிணாயணம் என கூறப்படும்.
- இரண்டு அயனங்கள் ஓர் ஆண்டு கணக்காகும்.
இந்த அளவுகளில் சில சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. பதினைந்தாம் முகூர்த்தம் ‘ஸந்தியா’ ஆகும். சூரியன் உதித்த முதல் மூன்று முகூர்த்த காலம் ‘ப்ராதஹ காலம்’ என்பர். அடுத்த மூன்று முகூர்த்த காலம் ‘ஸங்கவம்’ என்பர். அதன் பின் மூன்று முகூர்த்தங்கள் ‘மத்தியானம்’ என்பர். பிறகு வரும் மூன்று முகூர்த்தங்கள் ‘ஸாயாஹனம்’ ஆகும்.
இந்த கால அளவுகள் சூரிய கதியினால் கணக்கிடப்பட்டவை. சூரியன் சஞ்சரிக்கும் உத்தராயணம் மற்றும் தக்ஷிணாயங்களின் நடுவில் உள்ள ஆகாயத்தின் அளவு 183 கிராந்தி வட்டமாகும்.
ஷாஸ்திர பிரகாரம், சூரியன் உத்தராயணத்தில் ஏறி தக்ஷிணாயத்தில் இறங்கி செல்கிறார். இதற்க்கு 366 கதிகள் ஆகும் பட்சத்தில், சூரியன் ஒரு வருடத்தை கழிக்கிறார் என அறியப்படுகிறது.
மேலும் வருடங்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை மையப்படுத்தி நான்கு வகைகளாகும், அவை –
- செளரமானம்
- சாந்திரமானம்
- சாவணமானம்
- நட்சத்திர மானம்
2. தேவ மானம்
தேவர்களின் பகல், நமது ஒரு உத்தராயண காலத்திற்க்கு சமம் ஆகும். அதேபோல், அவர்களின் இரவு என்பது நமது ஒரு தக்ஷிணாயணம். ஆக, நம் மனிதர்களின் ஒரு ஆண்டு என்பது தேவர்களின் ஒரு நாள் ஆகும்.
12,000 தேவ வருடங்களை கொண்டது ஒரு சதுர்யுகம் ஆகும், இதில் 43 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகள் உள்ளன.
சதுர்யுகத்தின் நான்கு யுகங்கள் இவைகளாகும் –
- கிருத யுகம் – 4800 தேவ வருடங்கள்
- த்ரேதா யுகம் – 3600 தேவ வருடங்கள்
- துவாபர யுகம் – 2400 தேவ வருடங்கள்
- கலியுகம் – 1200 தேவ வருடங்கள்
3. பிரம்ம மானம்
நாம் இப்பொழுது பார்த்த கணக்கின் பட்சத்தில், 1000 சதுர்யுகங்கள் பிரம்மனின் ஒரு பகல், மற்றும் 2000 சதுர்யுகங்கள் பிரம்மனின் ஒரு நாள் ஆகும்.
சதுர்யுகங்களை மஹாயுகம் எனவும் கூறுவர். தேவர்களின் ஒரு யுகம் 360 மஹாயுகங்களை அடங்கும் ஒரு திவ்ய யுகம்.
1 மன்வந்திரம் 71 திவ்ய யுகங்களை சேர்ந்தது.
14 மன்வந்திரங்கள் சேர்ந்து பிரம்மனின் ஒரு நாள் ஆகும்.
அத்தகைய 360 நாட்கள் சேர்ந்து பிரம்மாவுக்கு ஓர் ஆண்டு ஆகும்.
பிரம்மனின் 108 ஆண்டுகள் என்பது ஶ்ரீமன் நாராயணனின் ஒரு நிமிடம் அல்லது கல்பம் எனப்படும்.