பெண்கள் சுத்தமானவர்கள், புனிதமானவர்கள், பூஜிக்கத் தகுந்தவர்கள், பெண்களை நிந்திக்கவே கூடாது, அவர்கள் எந்த வீட்டில் பூஜிக்கப்படுகிறார்களோ அங்கு புனிதம் நிலவுகிறது.
புனிதமான செயல்களால் உயர்ந்த நிலையை அடையலாம்.
ஒரு கன்னிப்பெண் தன் தந்தையிடம் அவர்தான் எனக்கு வேண்டிய கணவர் என்று சொல்லலாம்.
திருமணம் ஆகும் வரை தந்தையின் பராமரிப்பிலும், பின்னர் கணவனின் பராமரிப்பிலும், அதன்பின்னர் மூத்த மகனின் பராமரிப்பிலும் இருப்பது வழக்கமாகிறது.
பிரம்மா தான் முதலில் இவளுக்கு இவன்தான் கணவன் என்பதை நிச்சயிக்கிறார். ஆணும் பெண்ணும் பிறந்தவுடனேயே “இன்னாருக்கு இவன்” என்று தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.
பிரம்மாவால் அதுதான் நிச்சயிக்கப்பட்ட திருமணம், அது நடந்தே தீரும். அதற்குள் குடும்ப தலைவர் ஏராளமாக ஆண்களின் ஜாதகங்களை கையில் வைத்துக் கொண்டு பொருத்தம் பார்த்துப் பார்த்து காலத்தை வீணடிக்கிறார்.
கடைசியில் அந்தப் பெண்ணிற்கு இவன்தான் கணவன் என்று உறுதியாக சொல்லப்படும் பொழுது பிரம்மனின் திட்டம் வெற்றியடைகிறது.
மனைவி எப்படி இருக்க வேண்டும்
குடும்பத்தின் பொறுப்பை ஏற்கும் அவள் குடும்பத்திற்கு அனுசரனையாகவும், எல்லோருடனும் ஒத்துப்போகும் குணமும் கொண்டு பொறுப்புகளை சமாளிப்பவளே உத்தம பெண் ஆவாள்.
பெண்களின் திருமணம் நல்ல அறிவு உள்ளவர்களுடன் இருக்க வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கை நிலைநாட்டப்படவேண்டும். ஒரு பெண் பல ஆண்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம்.
புத்ரர்களுடனும், உறவினர்களுடனும், விருந்தாளிகளுடனும் கூடி மகிழ்ந்து நீண்ட காலம் நிலைத்து வாழ இல்லறத்தில் கணவன் மனைவி ஒருபோதும் பிரியாதிருக்க வேண்டும்.
இல்லறத்தில் தர்மத்தின் ஆதாரம் சத்யமே. சத்யத்திலிருந்துதான் குடும்ப சூக்தம் துவங்குகிறது. ஆண் பெண் நடத்தை முறைகளில் சத்யம், நேர்மை, எளிமை, பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் நிலையில் துவங்குகிறது.
இந்த இருவர்களிடையே பொய்மை, கபடம், வஞ்சகம், முதலியன வரவேகூடாது. இதுதான் எடுத்துக்காட்டான இல்லறம்.
மணப்பெண்ணைப் பார்த்து அவர் தந்தை கூறுவது, மகளே நீ எப்போதும் கணவனுடன் மகிழ்ச்சிகரமான குடும்பம் நடத்து. அவனை எந்த சிக்கலிலும் துன்பத்திலும் மாட்டி விடாதே! அவனுடைய மகிழ்ச்சியே உன்னுடைய மகிழ்ச்சி. கணவனும் இதையே விரும்புவான்.
அடுத்துப் புகுந்த வீட்டிலிருந்து மணப்பெண் ஒருபோதும் சில குறிப்பிட்ட வேளைகளில் தவிர தந்தையின் வீட்டிற்கு செல்ல கூடாது.
எந்த சூழ்நிலையிலும் விவாகரத்து அனுமதிக்க கூடாது. கணவன் என்ற மரத்தின் கொடிக்கம்பில் மனைவி என்கிற கொடி நெருக்கமாக சுற்றி சுற்றி படருவதால், அது எந்த சூழ்நிலையிலும் விலகி விடும் சூழ்நிலை ஏற்பட்டதில்லை.
வைதீகமான திருமணத்தில் விவாகரத்து என்ற சொல் முற்காலத்தில் ஏற்பட்டதில்லை. இல்லற ஈடுபாடு அத்தனை மகிழ்ச்சிகரமாக இருந்தது. இதற்கு மரியாதை தரும் மதிக்கும் புருஷனாக கணவன் இருக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம்.
கணவன் வீட்டில் எல்லாப் பொறுப்புகளையும் மணமகளே ஏற்று வெகு திறமையுடன் நிர்வாகம் செய்திட வேண்டும்.
இந்த இல்லறத்தில் இருந்துகொண்டே தங்கள் சந்ததிகளை நேர்மையுடன் குலக்கல்வியுடன் தீய பழக்கங்கள் நாடாமல் வளர்க்க வேண்டும் என்பது அவளுடைய முக்கியமான கடமைகளில் ஒன்று.
குழந்தைகளின் கல்விக்கு தந்தையே பொறுப்பேற்க வேண்டும். தாயும் தந்தையும் பரிசுத்தமான இல்லற வாழ்க்கை நடத்தினால் அதன் விளைவு குழந்தைகளின் மனதிலும் படியும்.
பெரியவர்கள் ஆன பிறகு அவர்களும் ஒரு நல்ல கணவனாக அல்லது ஒரு நல்ல மனைவியாக உருப்பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணின் கல்வி எந்த துறையில் அமைந்தாலும் சமையல் கலை பாடமே முதலில் முக்கியமாக அமைகிறது.
பாகசாஸ்திரம்
பெண்களுக்கு ‘பாகசாஸ்திரம்’, அதாவது,எப்படி சமையல் செய்வது என்பதை போதிக்கும் பாடங்கள் அவசியம்.
- அதன்படி சமைக்கும் உணவு பித்தத்தை அதிகரிப்பதாக இருக்க வேண்டாம்.
- எது கசப்பான உணவு என்பதை அறிய வேண்டும்.
- எந்த உணவு உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து விடும் என்கிற எண்ணம் வேண்டும்
- எந்த உணவு மெல்லக் கொல்லும் விஷம் போன்றது என்பதை உணரவேண்டும்.
- எந்த உணவு உண்ணத்தகாதது.
இம்மாதிரியே நம் உண்ணும் உணவில் சேர்க்க வேண்டாத உணவு எவை எவை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறே உண்ணத்தகுந்த சாத்வீகமான உணவை தயார் செய்யும் பக்குவப்படுத்தும் முறையையும் அறியவேண்டும்.
அதேபோல் பெண்களிடம் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு இருக்கிறது.
குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு
அதனால் குழந்தைகளை நல்ல விதமாக வளர்க்கும் கலையைப் பற்றியும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் பாடத்திட்டம் போதிக்கப்பட வேண்டும்.
குழந்தைகள் சாப்பிட வேண்டிய அன்னம் எது, குடிக்க வேண்டிய பானம் எது, திண்பண்டங்கள் எது என்கிற, அறிவும் பெண்களுக்கு வேண்டும்.
குடும்பப் பாரத்தை எப்படித்தாங்கி நிர்வாகம் செய்யவேண்டும் என்கிற முறையும் அடக்கமும், அதேநேரம் நல்லதை செய்ய உறுதியான மனநிலையும் வேண்டும்.
மேலும் பெற்றோர்கள் இம்மாதிரியான கல்வியை போதிக்கும் கன்னியர்களின் குருவிற்கு அவர்களின் திருமண சமயத்தில் உயர்ந்த ஆடைகளை குருதக்ஷிணையாக பரிசாக அளிக்க வேண்டும்.
மேலும் இளம் வயதில் இருக்கும் கன்னியர்களின் சித்தம் காமவயப்படாமல் தெளிவாக இருக்க குரு உபதேசம் செய்ய வேண்டும்.
அடுத்ததாக குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் அன்புடன் பழகவேண்டும். வீட்டினுள் சொல்லத்தகாத சொற்கள் ஒருபோதும் கேட்க்கப்பட வேண்டாம். மனைவியிடம் குழைய வேண்டாம், ஆனால் இனிமையாக பேசவேண்டும்.
அவளிடம் பேசும்பொழுது மங்களகரமான வார்த்தைகளையே உபயோகப்படுத்தவேண்டும். இம்மாதிரியே மனைவியும் கணவனிடம் நடந்துகொள்ள வேண்டும்.
அவனை அதிகாரம் செய்ய வேண்டாம். அவ்வாறே கணவனும் அவளிடம் கோபத்தால் இணைந்து பேசி சச்சரவு வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது.
ஒரு திருமணத்தில் ஆண் ஜாதகம் மற்றும் பெண் ஜாதகம் எது வலிமையாக அமைதல் வேண்டும், தொடர்ந்து காண்போம்.