இக்காலத்தில் மேனாட்டவரின் தொடர்பால் நமது பழக்கவழக்கங்கள் பெரிதும் மாறிவிட்டன. அவற்றுள் நமது நேரக் கணக்கீட்டு முறையும் ஒன்று. அதன்படி ஒரு நாள் என்பது 24 மணிநேரமாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு நேரத்தை கணக்கிட “நாழிகை ” அடிப்படையிலான நேர அளவு முறையே நம் நாட்டில் வழக்கத்தில் இருந்தது. எனவே இப்பதிவில் நாழிகை மற்றும்
அவை தொடர்புடைய கடிகை, யாமம் ஆகியவற்றின் விளக்கங்கள் பற்றி பார்போம்.
நாழியும், நாழிகையும்
நாழியை சமஸ்கிருதத்தில் “கடிகா” என்பர். இவை இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான். இவ்விரண்டு சொற்களும் பாத்திரத்திற்கு வழங்கப்படும் பெயராகும்.
அரிசி முதலான பொருள்களை அளப்பதற்கு “நாழி” எனப்படும் பாத்திரம் உபயோகிக்கப்பட்டு வந்தது.
தண்ணீர் கொண்டு வருவதற்கு “குடம்” உபயோகிக்கப்பட்டு வந்தது. குடத்திற்கு “கட, கடீ” என்ற மறு பெயர்களும் உண்டு.
“கடிகா” என்பது சிறிய குடத்தை குறிப்பிட பயன்படுத்தப்பட்ட சொல். இந்த பாத்திரங்களே நெடுங்காலமாகக் கால அளவை அறிய பயன்பட்டு வந்த உபகரணங்கள். ஆகையால் அவற்றின் பெயரே கால அளவை குறிப்பிடவும் பயன்படுத்தப்பட்டது.
ஒரு நாள் = 60 நாழிகைகள்
பழங்காலத்தில் அரசர்களின் அரண்மனைகளிலும் நீதிமன்றங்களிலும் “நாழி” அல்லது “சிறு குடம்” ஒன்று அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். அதற்கு மேல் நேராக நீர் நிரம்பிய பெரிய பாத்திரம் ஒன்று வைக்கப்பட்டு அதன் அடிப்புறத்தில் மிகச் சிறிய துவாரம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த துவாரத்தின் வழியாக பெரிய பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சொட்டு சொட்டாக கீழே வைக்கப்பட்டிருக்கும் நாழி அல்லது சிறு குடத்தில் விழுந்து கொண்டே இருக்கும்.
அதனை ஒரு வேலையாள் கவனித்துக் கொண்டிருப்பார். அந்த “நாழி” நிரம்பி விட்டால் அவர்
அருகிலுள்ள மணியை ஒரு முறை அடிப்பார். பின்னர் அந்த நாழியிலிருந்த நீரை கவிழ்த்து விட்டு மீண்டும் வெறும் நாழியை வைத்து விடுவார். இரண்டாவது முறை அது நிறைந்த பின்னர் இரண்டு முறை மணியை அடிப்பார். இவ்வாறாக 60 முறை மணியை அடிக்கும் வரை இம்முறை தொடரும்.
இதன் மூலம் மக்கள் இரவு பொழுதிலும் பகற்பொழுதிலும் காலத்தின் அளவை தெரிந்து கொண்டனர். இம்முறையே நம் நாட்டில் தொன்றுதொட்டு வழக்கத்தில் இருந்தது. மேலும் “நாழி” எனும் வார்த்தை நாட்டுப்புறங்களில் இன்றளவும் வழக்கத்தில் உள்ளது. “கடிகா” என்னும் சொல்லில் இருந்தே “கடிகாரம்” என்ற சொல் உருவானது.
யாமம்/சாமம்
பகற்பபொழுதின் முப்பது நாழிகைகள் நான்கு யாமங்களாகவும், இரவு பொழுதின் முப்பது நாழிகைகள் நான்கு யாமங்களாகப் பிரித்து வழங்கப்பட்டன.
அதாவது,
ஒரு நாள் = 60 நாழிகை = 8 யாமம்
ஒரு யாமம் = ஏழரை நாழிகை
யாமத்தை சமஸ்கிருத மொழியில் “ப்ரஹர” என்பர். இதற்கு “அடித்தல்” என்று பொருள். நாழியில் சொட்டு சொட்டாக விழும் தண்ணீர் ஏழரை நாழிகளை நிறைத்த பிறகு வேலையாள் மணியை ஒரு தரம் “அடிப்பது” வழக்கம். அதை கேட்பவர்கள் ஒரு யாமம் கழிந்தது என்று உணர்வர். ஆகையால் “அடித்தல்” எனும் பொருளுள “ப்ரஹர” என்னும் சொல்லே யாமத்துக்கும் மறுபெயராகிவிட்டது.
நட்சத்திரங்களும், நாழிகை அறிதலும்
இரவு நேரங்களில் நாழிகையை அறிவதற்கு 27 நட்சத்திரங்களும் தான் ஆதாரமாக இருந்தன. பெரிய செல்வந்தர்களின் வீடுகளிலும், அரசர்களின் அரண்மனைகளிலும், நீதிமன்றங்களிலும், ஆலயங்களிலும் தான் மணியை அடித்து நேரத்தை அறிவிப்பார்கள். ஆனால் சாதாரண மக்கள் வாழுமிடங்களில் நட்சத்திரங்களே நேரத்தை கணக்கிட உதவின.
“ஜன்ம – ருது – ம்ருத்யவ” என்று குறிப்பிடப்படும் “பிறப்பு, ருதுவாதல், இறப்பு” போன்றவை இரவில் நிகழ்ந்தால் அந்த நேரம் துல்லியமாக தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் சம்பந்தப்பட்டவர்கள் “தீட்டுக் காத்தல்” போன்ற காரியங்களுக்கு இரவில் நாழிகை எவ்வளவு என்பதை அறிய வேண்டியது அவசியமாக இருந்தது. இந்நிகழ்வுகள் ஒரு இரவின் முப்பது நாழிகைக்குள் முதல் இருபது நாழிகைகளில் நிகழ்ந்தால் முன் தினத்தையும் அதே இரவின் மூன்றாவது பத்து நாழிகைகளில் நிகழ்ந்தால் மறுநாளையும் சேரும்.
அப்போது நட்சத்திரங்களின் உதவியால் தான் மக்கள் நேரத்தை கணக்கிட்டனர். கீழ்வானத்திலிருந்து மேல் வானம் வரை பரவலாக காணப்படும் நட்சத்திரங்களில் நடுவானில் காணப்படும் நட்சத்திரத்தையே ஆதாரமாகக் கொள்ள வேண்டும். அதனை “உச்சம்” என்று வழங்குவர். இருபத்தியேழு நட்சத்திரங்களும் உச்ச நிலைக்கு வரும்பபோது அதன் ஆதாரத்துடன் இரவில் நேரம் கணக்கிடப்படும். அவ்வாறு கணக்கிடுவதற்கான சூத்திரங்களும், நட்சத்திரங்களின் அமை ப்பும் மக்களுக்கு நன்கு தெரிந்து இருந்தது. எனவே நிமிர்ந்து பார்த்த ஒரு நொடியில் மக்கள் நேரத்தை தெரிந்து கொண்டனர்.
இக்காலத்தில் பார்க்கும் இடமெல்லாம் பலவகையான கடிகாரங்கள் குவிந்து கிடப்பதனால் மக்கள் அவற்றையே நம்பி இருக்கின்றனர். பழமையான முறைகள் இப்போது வழக்ககொழிந்துவிட்டன. வயது முதிர்ந்த சிலரிடையே தான் இம்முறைகள் இன்றும் உயிர் பெற்று வாழ்கின்றன.