பஞ்சாங்கம் (எ) காலக்கணிதம்
ஒருவர் தனது குடும்பத்தில் சுப காரியங்கள் செய்ய முடிவெடுக்கிறார், அதனை எப்போது செய்வது என்ற நிலையில் உடனே அவர் சென்று பார்ப்பது ஜோதிடரைத்தான். நல்ல காரியங்கள் செய்யவேண்டிய காலம் மற்றும் தவிர்க்க வேண்டிய காலம் என்று இரண்டு வகைகள் உள்ளது.
ஒவ்வொரு காரியங்களும் மாதங்கள், கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம், நட்சத்திர தியாஜ்யம், அமிர்தாதி யோகம், கரிநாள், நேத்திர ஜீவன் என்ற அடிப்படையிலும் பார்க்கலாம்.
மேலும் அடுத்ததாக லக்கினம், கிரக நிலைகள், பஞ்சக சுத்தி, தாராபலன், தின கால ஓரை, முக்குணவேளை, கெளரி பஞ்சாங்கம், இராகு மற்றும் குளிகாதி நால்வர் காலம், பஞ்ச பட்சி சாஸ்திரம், சகுனம், நிமித்தம், ஆரூடம், ஆகிய அடிப்படையிலும் தீர்மானிக்கப்படுவதாக உள்ளது.
ஒருவர் ஜோதிடரிடம் கூறும் சுப காரியங்களுக்கேற்ப ஜாதகரின் சுயஜாதகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மேற்கூறிய நிலைகள் கவனித்து அவருக்கு நல்ல காலம் நேரம் குறித்து அளிப்பது ஜோதிடரின் கடமையாகும்.
ஜோதிடர் இந்த காரியத்திற்காக முதலில் தொட்டு வணங்கி கையில் எடுப்பது பஞ்சாங்கம் எனும் காலகணித நூல் ஆகும். வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தின் அடிப்படையில் அனைத்து சுப நிகழ்வுகளுக்கும் பொருத்தமான நேரம் பஞ்சாங்கத்தில் கணிக்கப்படுகிறது.
பஞ்சாங்கம்
ஜோதிடவியல் விஞ்ஞான அடிப்படையில் புனிதமாக அமைந்த இந்தியாவின் பழமைவாய்ந்த காலக்கணிதமாக அமைந்துள்ளது. இது மதம் மற்றும் சமூக அடிப்படையிலும் முக்கியமானதாக விளங்குகிறது. ஒரு சுப நிகழ்வுக்காக பஞ்சாங்கத்தைப் பயன்படுத்தும் ஒருவர் தனது பாவங்களிலிருந்து விடுபடுவார் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது.
ஆகவே ஒவ்வொருவரும் தனது வீட்டில் ஒரு பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு அதனை அனுதினமும் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஏனெனில்
திதி பற்றிய அறிவு வளத்தையும்,
வாரம் பற்றிய அறிவு நீண்ட ஆயுளையும்,
நட்சத்திரம் பற்றிய அறிவு பாபங்களை நீக்கவும்,
யோகங்கள் பற்றிய அறிவு நோயிலிருந்து விடுதலையும்,
கரணம் பற்றி அறிதல் அனைத்து முயற்சிகளில் வெற்றியும் தரும்.
எனவே பஞ்சாங்கம் பற்றிய ஞானம் நமக்கு தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகியவற்றை தரும். நமது செயல்கள் விரும்பிய பலன்களை அளிப்பதற்கும் நமது நோக்கங்கள் நிறைவேறுவதற்கும் உள்ள வாய்ப்புகளை வழங்கிட பஞ்சாங்கம் ஒரு கருவியாகின்றது.
நல்ல நேரத்தில் ஆரம்பிக்கப்படும் எந்த முயற்சியும் வளம் தரும். நல்ல நாளில் செய்யப்படும் எந்த செயலும் ஆயுள் விருத்தி தரும். நல்ல நட்சத்திரம் உள்ள நாளில் செய்யப்படும் செயல்கள் தீயவற்றிலிருந்து காப்பாற்றும். நல்ல யோகம் உள்ள நாளில் செய்யப்படும் செயல்கள் நோய்களை விரட்டும்.
சாதகமான கரணம் உள்ள நாளின் செயல்கள் தடை தாமதம் இன்றி இனிதே நிறைவேறும்.
ஒரு சிறந்த ஜோதிடர் முதலில் பஞ்சாங்கத்தை தொட்டு வணங்கி கிரக மந்திரங்களை உச்சரித்து பின்பே பலன்களை முறையாக கூற முயல்வார். பஞ்சாங்கத்தை முழுதும் கற்றறிந்த ஒருவரே ஜோதிடம் பற்றிய ஞானத்தை அறிய இயலும்.
காலத்தையும் நேரத்தையும் அறியாமல் வெறும் பலன்களை மட்டும் கூறுவது என்பது வெறுமனே ஆகும். பஞ்சாங்கம் அறிவு இல்லாமல் ஜோதிட சாஸ்திரம் கைகூடாது. ஆகவே முதலில் பஞ்சாங்கம் எனும் காலகணித அறிவைப் பற்றிய விபரங்களை இனி தொடர்ந்து காண்போம். பஞ்சாங்கம் அறிவை கற்றுக் கொடுப்பவரும் அதனை முறையாக கற்ப்பவரும் பாவங்களிலிருந்து விடுதலையாகி புனிதமடைகின்றனர் என்று சாஸ்திரம் கூறுகிறது.