வாழ்வின் கர்மாக்களில் ஒன்றான வம்ச விருத்திக்கான நிகழ்வு, சந்ததி மேன்மைக்காகவும், ஆண் பெண் திருமண நிலைகள் நிலைப்படுத்தப்பட்டு முன்பு,
- நிமித்தம்
- சகுனம்
- பட்சி சாஸ்திரம்
- விருட்சம்
இன்னம் பிற கோத்ரம்
- அதாவது ரிஷி கோத்ரம்
(இதிலும் திருமண வகையில் வம்ச கோத்ரம் பற்றி உத்திரகாலாமிர்தத்தில் காளிதாசரும் மிக விரிவாக குறிப்பிட்டுள்ளார்) என்றவாறு 22 திருமண பொருத்தங்கள் உள்ளடக்கியே பார்க்கப்பட்டது.
காலப்போக்கில் சுருக்கியும் அவசியமற்றதாகவும் கருதப்பட்டு தசவித (10) பொருத்தங்களாகவும், பின்னர் அதுவும் சுருங்கி,
- தினம்
- கணம்
- யோனி
- ராசி
- ரஜ்ஜு
என்ற நிலையில் (5) பஞ்ச பொருத்தங்களே அதி முக்கியம் என பிரிக்கப்பட்டும், ஏனைய விலக்கப்பட்டும் உள்ளன.
மேலும் மனித வாழ்வின் வாழ்நிலை பாவகமாக 2, 4, 7, 8, 12ம் இடங்கள் நிலைப்படுத்தப்பட்டு, ஆண் பெண் ஜாதகங்களில் 2, 4, 7, 8ம் இடங்கள் வளம் பெறவே குடும்ப வாழ்வு சுபிட்சமாக இருக்கும் என்றும், இதில் ஒருவருக்கு சிறப்புற்று மற்றொருவருக்கு வலு குறைந்து இருப்பின் நன்று.
இந்த வாழ்நிலை பாவகங்கள் இருவர் ஜாதகங்களிலும் வலு கெட்டு நிற்க இவர்கள் வாழ்வு சிறப்பாக அமைவதில்லை என்பதே உண்மை.
நட்சத்திர பொருத்தம் வாழ்நிலை பாவகம்
மேலும் எவ்வளவுதான் நட்சத்திர பொருத்தங்கள் சரியாக இருந்தாலும், வாழ்நிலை பாவகங்களில் இருக்கும் கிரகத்தின் அமைப்புகள் சிறப்பாக இருவர் ஜாதகங்களிலும் இல்லாது இருக்குமானால், அவை நல்ல மணவாழ்வை தருவதில்லை.
இணக்கமில்லாத வாழ்வு, பிரிவினை அல்லது தவறான நடவடிக்கை, முரண்பாடாக வாழ்வது ஆகிய நிலைகளை தரும்.
பொறுமையாகவும், கவனமாகவும், தெளிவாகவும் பார்க்க வேண்டியதே திருமண நிலைதான். எனவே திருமண பொருத்தங்கள் பார்ப்பதில் கிரக நிலை அமைப்புக்கள் ரீதியான முடிவே சரியானதாக இருக்கும் என்பது தான் நியதி.
ஆகவே திருமண பொருத்தம் தசவித பொருத்தங்களுடன் சேர்ந்து கிரக அமைப்பு ரீதியான பொருத்தம், புத்திர பாக்கியம் நிலை, இருவருக்கும் தசா சந்திக்கும் பின் தசா விடுதிகள், இருவர் ஜாதகங்களிலும் உள்ள தோச நிலைகள், ஆகியன ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ஜோதிடர் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
பொதுவாக திருமண பொருத்த நிலைகளில் சமரசத்துக்கோ, சஞ்சலத்திற்க்கோ, இடம் அளிக்கக்கூடாது. சிறப்பாக இல்லை எனில் பக்குவமாக சொல்லி விளங்க வைத்து தவிர்ப்பதே மேல்.
நிர்ப்பந்தம், உறவு நிலை தடைபடும் என்பதற்கு ஜோதிடராகிய நாம் துணை போகாது கிரக அமைப்பு மற்றும் நட்சத்திர நிலையில் எது சரியோ அதை சரியாக செய்வதே நம் சாஸ்திரங்களுக்கு செய்யும் சேவையாகும்.
இதில் ஒரு முக்கியமான விஷயம் ஆண் ஜாதகரிடம் பெண் ஜாதகம் பற்றி தரக்குறைவாக எதுவும் ஜோதிடர் கூறக்கூடாது. ஏனெனில் இது ஜோதிடருக்கே ஆபத்தாக முடிந்த கதைகள் உள்ளன.
ஒரு சமயம் ஒரு ஜோதிடர் பெண்ணின் ஜாதகத்தை பற்றி தரம் குறைவாக பலன் கூற அந்த பலனை அப்படியே
அந்த ஆண் ஜாதகர் பெண் ஜாதகியிடம் கூற பெண் ஜாதகர் உடனே கோபமடைந்து அந்த ஜோதிடரின் விலாசம் வாங்கி கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு பதிவு செய்து விட்டார்.
நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது ஜோதிடரிடம் நீதிபதி கேள்வி கேட்கிறார், நீங்கள் தரம் குறைவாக பலன் கூறினீர்களா. ஜோதிடரும் ஆமாம் அய்யா என்றார், நீங்கள் எப்படி தரம் குறைவாக பலன் கூறீனீர்கள், அய்யா பலன் நானாக கூறவில்லை, ஜோதிட பாடத்தில் உள்ள கிரக நிலையின் பலனையே ஜாதக பலனாக கூறினேன்.
ஆகவே அது என் தவறில்லை அய்யா, ஏதாவது நூலில் உள்ளதை படித்து விட்டு அதை அப்படியே கூறுவீர்களா. இதனால் அந்த ஜாதகர் பாதிப்பு நிலைக்கு ஆளாவார் என்பது ஜோதிடரான தங்களுக்கு தெரியாதா, என நீதிபதி கேட்டார்.
அய்யா நான் பல்கலைக்கழகத்தில் உயர்ந்த ஜோதிட பாடம் படித்து பட்டம் வாங்கி உள்ளேன். அவர்கள் அளித்த பாடநூல் படிதான் பலன் கூறுகிறேன். இப்போது நான் படித்தது பொய் என்றால், பல்கலைக்கழகத்தில் அளித்த அனைத்து ஜோதிட நூல்களும் பொய்யா?
இப்போது நான் படித்தது போல் சொல்லவேண்டுமா அல்லது படித்ததை மாற்றி பொய் சொல்ல வேண்டுமா தாங்கள் தான் கூறவேண்டும்.
இப்போது நீதிபதிக்கு தர்மசங்கடம் ஆகிவிட்டது. ஏனெனில் ஜோதிடருக்கு அபராதம் விதித்தால் பல்கலைக்கழகம் அளிக்கும் பாடங்கள் அனைத்தும் பொய்யானது என்றாகிவிடும்.
பல்கலைக்கழகத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்க கூடாது என்பதற்காக ஜோதிடரிடம் நீதிபதி கூறியது, ஜோதிடரே பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பாடங்கள் மெய்ப்பிக்கப்பட்டது.
எனவே அது உண்மையானது, ஆனால் ஜோதிட பாடங்கள் உதாரணம் மட்டுமே காட்டப்படுவது ஜாதகத்திற்கு ஜாதகம் பலன்கள் மாறுபடும் என்பது தங்களுக்கு தெரியாதா. இனிமேல் இதுபோன்ற பலன்களை சூசகமாக கூறவேண்டுமே தவிர, ஒருவர் பலன்களை மற்றொருவரிடம் வெளிப்படையாக கூறக்கூடாது என எச்சரித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆர்வக்கோளாறினால் பெண்களைப் பற்றிய இழிவான ஒரு சில பலன்களை ஜோதிடர் வெளிப்படையாக சொல்லக் கூடாது என்பதும் சாஸ்திரம் கூறும் தர்மம் ஆகிறது.