இந்திய கலாசாரத்தில் ஜோதிடம் வேதத்தில் ஒரு பகுதியாகும். வேத சாஸ்திரம் கூறும் விதிகளானது. பிரபஞ்சத்தை பற்றிய ஞானமெல்லாம் வேதமே தருகிறது.
இந்த வேதத்தின் அறிவு எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம். பிரபஞ்சத்தின் நடைமுறையை அறிகின்றவர்களெல்லாம் வேதவித்துக்கள். இந்த கோட்பாட்டின் படி வேதத்துக்கு ஒரு நாளும் அழிவில்லை.
எந்த அளவிற்கு ஒருவர் தன்னைப்பற்றியும், இப்பிரபஞ்சத்தைப் பற்றியும், ஒளிகளின் வேத அறிவைப்பற்றியும், இறைவனைப் பற்றியும், புரிந்து கொண்டிருக்கின்றாரோ, அந்த அளவிற்கு தன் உயிர், உடல், மனம், இம்மூன்றையும் ஏற்று சிறப்பான பாதையில் வழி நடத்தி செல்வார்.
இம்மூன்றைப் பற்றிய அறிவை அறியாதவரையில், அவரிடம் ஆறாவது அறிவின் முழுத்தன்மையும் அமைதியும் ஏற்படுவதில்லை.
அமைதியாக இருக்கும் பொழுது நமக்கு வேண்டிய அறிவு துல்லியமாக கிடைக்கப்பெறுகிறது.
மனிதனது வாழ்வின் நோக்கம்,
- அறம் – தர்மம்
- பொருள் – அர்த்தம்
- இன்பம் – காமம்
- வீடு – மோட்சம்
இவற்றைப் பெறுவதே என்று அதர்வண வேதம் கூறுகிறது.
அதேசமயம், ருக், யஜுர், சாம வேதங்களில்,
- பிரம்மச்சரியம்
- குடும்பம்
- வனவாசம்
- சந்நியாசம்
என ஒருவர் தன் வர்ணாஸ்ரம தர்மப்படி இகவுலக வாழ்வினை கடக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளில் எல்லாம் அடங்கும்.
அதனை மீறி ஒன்றுமில்லை என்று வேதங்களும் உபநிஷத்துக்களும் கூறுகின்றன.
அதனை அடையும் வழியை அனைத்து மார்க்கத்தினரும் குறிப்பிட்டுள்ளனர்.
அது ஒன்றே பிரம்மம் ஆகும்.
அதற்கு உருவம் என்று எடுத்துரைப்பதற்கு நம் மாயை அறிவால் எதுவும் இல்லை.
இந்த பிரபஞ்சத்திற்க்கு ஆதாரமாயுள்ள பிரக்ஞானம் பிரம்மம் எனப்படுகிறது. பிரக்ஞான சொரூபமாக ஜீவகோடிகள் அனைத்தும் இருக்கின்றன. எல்லாம் பிரக்ஞானம் என்று அறிகின்றவன் அத்வைதி.
பிரம்மத்தைப் பற்றி கூறும் போது அருகிலும் உள்ளது, தொலைவிலும் உள்ளது, அது எல்லோருடைய மனதிலும் சூட்சுமமாக உள்ளது, எல்லாப் பொருட்களிலும் உள்ளும் புறமுமாக உள்ளது, என கீதையும் எடுத்துரைக்கிறது.
இந்த ஞானத்தை பெறுவதற்கு சமஸ்கிருதம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதில் உள்ள வேதங்களை ஓதவேண்டும் என்ற அவசியமில்லை.
இக்காலத்தில் தோன்றிய முனிவர்களான ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி, சுவாமி விவேகானந்தர் போன்றோர் வேதத்தை ஓதாது பிரம்ம ஞானிகள் ஆகியிருக்கிறார்கள். ஆகவே வேதம் என்னும் பேரறிவு அனைவருக்கும் சொந்தமானது பொதுவானது.
ஆகவே அந்த எல்லையில்லாத பரம்பொருளாக விளங்கும் இறைவனை உள்முகமாக கண்டு வழிபட உடலைப் பேணி பாதுகாப்பது அவசியமாகிறது.
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனிலும் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது.
அதனிலும் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது.
அதனிலும் அரிது தானமும் தவமும் செய்தக்கால் வானவர் நாடு வழி திறந்திடுமே.
என அவ்வையார் அருளியுள்ளார்.
இவ்வுடலின் மூலமாக மட்டுமே இறைவனை அடைய முடியுமே தவிர வேறு எவ்வகையிலும் இறைவனை அடைய முடியாது என்றே வேதங்களும் சாஸ்திரங்களும் எடுத்துரைக்கின்றன.
மனிதனாக எந்த குறையும் இல்லாமல் பிறந்த நாம் முதலில் கற்க வேண்டியது ஞானக்கல்வியையே, அதுவே முக்தி இன்பத்தை கொடுக்கும். அதில் முக்கியமானது நம்மைப் பற்றி நாம் அறியும், இராசி மண்டலத்தில் அமைந்துள்ள நட்சத்திரம் மற்றும் கிரகங்கள் ஒளிகளின் பலன்கள் பற்றிய ஆராய்ச்சி அறிவாகும்.
வர்ணாசிரம தர்மப்படி குடும்பம் அமைய இருமனம் கொண்ட திருமண வாழ்வு அமைய வேண்டும்.
அதனை எவ்வாறு அமைப்பது,
நட்சத்திர பொருத்தமா..?
லக்ன பொருத்தமா..?
கிரக பொருத்தமா..?
ஜாதகம் கணிக்க முடியாத
காதல் பொருத்தமா…?
ஜோதிட ரீதியான சாஸ்திரம் என்ன கூறுகிறது என்று தொடர்ந்து காண்போம்…